ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜுனு மாவட்டத்தில் உள்ள நாவல்கர் பகுதியில் நடைபெற்ற கொடூரமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாவல்கர் வட்டத்திற்குட்பட்ட குமாவாஸ் என்ற கிராமத்தில், கடந்த ஆகஸ்ட் 2 மற்றும் 3-ம் தேதிகளில், துப்பாக்கியுடன் சுற்றி நாய்களை நேரில் பார்த்தவுடன் சுட்டுக்கொன்றது போன்ற ஒரு வீடியோ வைரலாகி பரவியது. அதில் நாய்கள் ரத்தம் வடிந்த நிலையில் சாலையோரத்தில் பிணமாக கிடந்தது உள்ளடங்கிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
வீடியோவைக் கண்டதும் போலீசார் அவசரமாக நடவடிக்கை எடுத்தனர். ஹெட் கான்ஸ்டபிள் சுப்கரன் தலைமையில் போலீசார் சம்பவ இடமான குமாவாஸ் கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதில் தும்ரா கிராமத்தைச் சேர்ந்த சூரஜ்ராம் பவாரியாவின் மகன் ஷ்யோசந்த் பவாரியா என்பவரே இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என அடையாளம் காணப்பட்டார். அவர்மீது விலங்குகள் கொலை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
राजस्थान झुंझुनू जिले के कुमावास गांव की घटना सरेआम कुत्तों को गोली से मार दिया गया पुलिस प्रशासन मौन कानून की धज्जिया उडा दी गई कृपया करके पुलिस तुरंत कार्रवाई करें @RajPoliceHelp @PoliceRajasthan @JhunjhunuPolice @DMJhunjhunu @RajCMO @PetaIndia @SupremeCourtIND pic.twitter.com/7y3wD3IlYz
— NARGIS BANO (@NARGISB75145697) August 3, 2025
இதேவேளை, ஹமிரி கலான் என்ற கிராமத்தின் முன்னாள் சர்பஞ்ச் சரோஜ் ஜஞ்ஜாரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரில், “கொலை செய்யப்பட்ட நாய்கள் யாரையும் தாக்கவோ, மிரட்டவோ இல்லை; ஆடுகளை கொன்றதாக கூறுவது பொய்யான காரணம். நஷ்ட ஈடு கேட்பதற்காக திட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
இது ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியாக இருக்கக்கூடும் என்றும், இதே குழுவினர் 5 மாதங்களுக்கு முன்பும் இதே கிராமத்தில் வந்திருந்தனர் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் விலங்குகளின் பாதுகாப்பு குறித்து சமூகத்தில் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது.
