எர்ணாகுளம் மாவட்டம் மலையற்றூர் அருகே முண்டங்கமட்டத்தைச் சேர்ந்த 19 வயது விமானப் போக்குவரத்து மாணவி சித்ரப்ரியா மர்மமாக காணாமல் போன நிலையில், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, மாணவியின் காதலன் ஆலன், கல்லால் அடித்துக் கொன்றதாகக் கள்ளாடி காவல் நிலையத்தில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
விடுமுறையில் வந்திருந்த சித்ரப்ரியா, சனிக்கிழமை இரவு கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் அவரது சிதைந்த உடல் குடியிருப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தோட்டத்திலிருந்து மீட்கப்பட்டது. மதுபோதையில் இருந்த ஆலனுக்கும் சித்ரப்ரியாவுக்கும் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் நடந்த வாக்குவாதம் கொலையில் முடிந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆலனைத் தொடர்ந்து, சடலத்துக்கு அருகே இரத்தக்கறை படிந்த கல் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருப்பது, கொலையை உறுதிப்படுத்துகிறது. வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து முழுமையான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
