சென்னை: ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழ்நாட்டில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு தகன மயானங்களில், ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டம்’ (டிச. 9) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற இத்திட்ட துவக்க விழாவில் பேசிய அமைச்சர், இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உடல்களை கண்ணியத்துடனும், முறைப்படியும் தகனம் செய்துள்ள ஈஷாவின் சேவைகளை மனம் திறந்து பாராட்டினார்.
சத்குருவின் வழிகாட்டுதலில், ஈஷா அறக்கட்டளை கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை வணிக நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நிர்வகித்து வருகிறது.
இம்மையங்களில், பாரம்பரிய சடங்குகளையும், சக்திமிக்க இறுதிச் சடங்குகளையும் மீண்டும் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்புதிய திட்டத்தின் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், எவ்வித நிதிச்சுமையுமின்றி தங்கள் அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியத்துடன் நிறைவேற்ற வழி பிறந்துள்ளது.
ஈஷா அறக்கட்டளை தற்போது தமிழக அரசுடன் இணைந்து, சென்னை, வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி மற்றும் கோவை மாவட்டம் உட்பட பல்வேறு இடங்களில் 17 எரிவாயு தகன மயானங்களை பராமரித்து வருகிறது.
கூடுதலாக மேலும் 3 மயானங்களின் பராமரிப்புப் பொறுப்பையும் ஏற்க உள்ளது. இந்த மயான வளாகங்களில், அழகான பூங்கா போன்று பசுமையான சூழலை உருவாக்குதல், அடர் மரங்களை நட்டுப் பராமரித்தல், முறையான நடைபாதை, சுகாதாரமான குளியல் மற்றும் கழிவறை வசதிகளை அமைத்தல் போன்ற சிறப்பான உள் கட்டமைப்பு வசதிகளை ஈஷா மேற்கொண்டுள்ளது.
மேலும், பணியாளர்களுக்கு இறந்தவர்களின் உடலை கண்ணியமாக கையாளவும், இறுக்கமான சூழலில் உரிய முறையில் நடந்து கொள்ளவும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை ஈஷா உறுதி செய்து வருகிறது.
நாடு முழுவதும் 1000 முதல் 3000 மயானங்களைத் தத்தெடுத்து, அவற்றின் பாரம்பரியமான புனிதத்தை மீட்டெடுப்பதே சத்குருவின் நோக்கம் என ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
