சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் அமைந்துள்ள உயர்நீதிமன்றம், கணவன் ஒருவர் தனது மனைவியின் மொபைல் தகவல்களும் வங்கி விவரங்களும் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பகிருமாறு கட்டாயப்படுத்த முடியாது எனக் குறிப்பிடும் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இது குறித்து, நீதிபதி ராகேஷ் மோகன் பாண்டே தலைமையிலான அமர்வு, “தனியுரிமை என்பது அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படும் உரிமையாகும். கணவன் மனைவிக்கு திருமணம் ஆனது என்றாலே அவருடைய அனைத்து ரகசிய தகவல்களிலும் உரிமை பெற முடியாது” என தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு, கணவன் தனது மனைவிக்கு விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவின் போது, அவரது அழைப்பு விவரப் பதிவுகளை (CDR) கோரி போலீசாரிடம் மனு அளித்ததையடுத்து உருவானது. கணவன், தன் மனைவி தகாத உறவில் இருப்பதாக சந்தேகித்து இருந்தாலும், அதற்கு ஆதாரம் காட்ட முடியாத நிலையில், குடும்ப நீதிமன்றம் மனுவை நிராகரித்தது. அந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

மேலும், ‘திருமண உறவின் காரணமாக அனைத்து தகவல்களையும் பகிரவேண்டும்’ என்பது சட்ட ரீதியில் தவறான கருத்தாகும் என்றும், ஒருவர் செய்யும் மொபைல் உரையாடல், வங்கி பரிமாற்றங்கள் போன்றவை தனிப்பட்ட வாழ்க்கையின் பகுதியாக இருக்கின்றன என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பில், கே.எஸ். புட்டசாமி vs யூனியன் ஆஃப் இந்தியா (2017) உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளையும் மேற்கோளாகக் கொண்டு, ஒரு நபரின் பாலியல் அடையாளம், கண்ணியம், தனிப்பட்ட வாழ்வின் நெருக்கத்தை பாதுகாக்க தனியுரிமை மிக முக்கியம் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. திருமணத்தில் வெளிப்படைத்தன்மை இருந்தாலுமே, தனியுரிமையை மீறும் வகையில் கட்டாயப்படுத்தல் மேற்கொள்ள முடியாது என்றும் இந்த தீர்ப்பு மூலம் கூறப்பட்டுள்ளது.