உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், ஸ்மோட்டோ  மூலமாக உணவு ஆர்டர் செய்த ஒரு இளைஞருக்கு, அவர் கேட்டதைவிட வேறு உணவு வந்து சேர்ந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் மனீஷ் திவாரி என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் ஆன்லைனில் ‘காளி மிர்ச்சு பன்னீர்’ (வெள்ளை மிளகு பன்னீர்) என்ற சைவ உணவை ஆர்டர் செய்திருந்தார். ஆனால் உணவகத்தில் இருந்து அவருக்கு ‘காளி மிர்ச்சு சிக்கன்’ என்ற மாமிச உணவுப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது.

உணவினை சாப்பிட்டதும், மனீஷின் நண்பர் ஒருவர் தொடர்ந்து வாந்தியுடன் தவித்து திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு சிக்கன் உணவுக்கு கடுமையான அலர்ஜி இருப்பதும் தெரியவந்தது.

இதனால், மனீஷ் உடனே விபூதி கண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த உணவகத்தின் ஊழியர்கள் தாங்கள் தவறுதலாக சிக்கன் அனுப்பிவிட்டோம் என கூறியதாகவும், அதற்கான பொறுப்பை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. மதவழிப்புணர்வுக்கும், உடல் நலத்துக்கும் எதிராக நடந்த இந்த செயல் ‘தர்ம விரோத செயலாக’ கருதப்பட வேண்டும் என மனீஷ் தெரிவித்துள்ளார்.

இதனை மையமாகக் கொண்டு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து, உணவகத்தினர் மற்றும் டெலிவரி சேவையின் பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்னரும் நடந்துள்ளது. நொய்டா பகுதியில் ஒருமுறை பன்னீர் சாப் கேட்ட ஒரு வாடிக்கையாளருக்கு சிக்கன் சாப் அனுப்பி உணவகம் சர்ச்சையை சந்தித்தது.

இதுபோன்று  உணவுத் தவறுகள் மீண்டும் மீண்டும் நடைபெறுவதால், பொதுமக்கள் உணவுப் பணியகங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பலர் வலியுறுத்தி வருகின்றனர்.