உத்தரபிரதேசம் மாநிலம் பாராபங்கி மாவட்டம் தேவா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குறட்டை பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்த 25 வயதான குஃப்ரான் என்ற இளைஞர், சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட இரத்தப்போக்கால் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிகிச்சைக்கு பிறகு குஃப்ரானின் மூக்கு மற்றும் வாயிலிருந்து இரத்தம் வெளியேறத் தொடங்கியதையடுத்து, உடனடியாக சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும், டாக்டர் வருவதற்கு 2 மணி நேரம் ஆகிவிட்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
குஃப்ரான் சமீபத்தில் சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பியவர். குறட்டை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இவர், ENT நிபுணரான டாக்டர் விவேக் வர்மாவை அணுகினார். மூக்கில் உள்ள எலும்பு பெரிதாக இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை தேவை என கூறப்பட்டது. ரூ.40,000 டெபாசிட் செலுத்திய பிறகு, ஞாயிறு காலை ஆஸ்தா மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்றது. காலை 7 மணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதுடன், காலை 11 மணிக்கு வார்டுக்கு மாற்றப்பட்ட குஃப்ரானுக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த குடும்பத்தினரும், உறவினர்களும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தினர். நூற்றுக்கணக்கானோர் தேவா சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் தலையீடு செய்ததையடுத்து மாலை 5 மணிக்கு நிலைமை சமாதானமாகி, உடல் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆர்.கே.ராணா, “குடும்பத்தினரிடம் இருந்து புகார் பெற்றுள்ளோம், வழக்கு பதிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.
இதேவேளை, மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வீரேந்திர படேல், “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்பட்டபோது, டாக்டர் விவேக் வந்து சிகிச்சை வழங்க முயன்றார். ஆனால், மாரடைப்பால் குஃப்ரான் உயிரிழந்தார்” என விளக்கம் அளித்துள்ளார்.
