ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பைஜ்நாத்தாண்ட் கிராமத்தில், சுதிர் மஹதோ மற்றும் அவரது மகன் ரிதேஷ் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தந்தையையும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகனையும் கடித்தது.
பாம்பு கடித்ததை அறியாமல் இருந்த நிலையில், அதிகாலையில் அவர்களின் உடல்நிலை மோசமடைந்த பிறகுதான் குடும்பத்தினர் விஷப்பாம்பு வீட்டிற்குள் இருப்பதை உணர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, குடும்பத்தினர் ஒரு மந்திரவாதியிடம் பேயோட்டும் சடங்குகளைச் செய்துள்ளனர்.
இதனால் விஷம் உடல் முழுவதும் வேகமாகப் பரவியது. பின்னர் ஆபத்தான நிலையில் ராஞ்சியின் RIMS மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
