சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதி மதுபாரில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, யான்சி (18) என்ற இளம் பெண் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த யான்சி மற்றும் அவரது தோழிகள், தங்களது ஆண் நண்பர்களுடன் பாரில் நடனமாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த தி.மு.க கொடி கட்டிய காரில் வந்த வாலிபர்கள் சிலர் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து, பாட்டின் பாதுகாவலர்கள் அனைவரையும் வெளியில் அனுப்பியுள்ளனர். பின்னர், யான்சி மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் நோக்கிப் புறப்பட்டபோது, ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் காரில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
கோயம்பேடு மேம்பாலம் அருகே சென்றபோது, அந்த வாலிபர்கள் தங்களது காரை இருசக்கர வாகனத்தின் மீது அடுத்தடுத்து இரண்டு முறை பலமாக மோதியுள்ளனர். இதில் தூக்கி வீசப்பட்ட யான்சி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; அவருடன் இருந்த 17 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கோயம்பேடு போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் காரின் பதிவு எண்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். இதன் விளைவாக, அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாலகுரு, சூளைமேட்டைச் சேர்ந்த ஜோஸ்வா, கல்லூரி மாணவர் கிஷோர் குமார் உட்பட வாலிபர்கள் 7 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த காரையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
