தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் – விஜயா (50) தம்பதி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அனந்த பத்மநாபன் என்பவரது வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் மாடப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்ந்தனர். வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் விஜயா அங்கிருந்த 35 சவரன் நகைகளைத் திருடிக்கொண்டு தலைமறைவானார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சேலையூர் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, மேல்மருவத்தூரில் பதுங்கியிருந்த தம்பதியரை இரு தினங்களுக்கு முன்பு பிடித்தனர். இரண்டு நாட்கள் விசாரணைக்குப் பிறகு, நேற்று முன்தினம் போலீசார் தம்பதியரை அனந்த பத்மநாபனின் பாதுகாப்பில் தங்குமாறு அனுப்பி வைத்தனர்.

அதன்படி, அவர்கள் மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு தனி அறையில் தங்கியிருந்தனர். நேற்று நள்ளிரவில் நகைக் கொள்ளை வழக்கில் சிக்கியது தொடர்பாகக் கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம், மனைவி விஜயாவை கத்தியால் சரமாரியாக வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அனந்த பத்மநாபன், விஜயா கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், பன்னீர்செல்வம் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடுவதையும் கண்டு அசோக் நகர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.

போலீசார் பன்னீர்செல்வத்தை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நகை திருட்டு வழக்கில் சிக்கிய விசாரணை கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், போலீசார் தனியார் நபரிடம் ஒப்படைத்தது ஏன் என்பது குறித்து உயர் அதிகாரிகள் இப்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.