இந்து, சீக்கியம் அல்லது பௌத்த மதத்தைத் தவிர்த்து வேறு மதங்களுக்கு மாறுபவர்கள், தங்களின் ‘பட்டியல் சாதி’ அந்தஸ்தைத் தொடர முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 24) அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இதன் விளைவாக, மதம் மாறியவர்கள் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டப் பாதுகாப்பைப் பெற தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்று நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஸ்டர் சிந்தாடா ஆனந்த் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகு, தனக்கு நேர்ந்த சாதியத் துன்புறுத்தல்களுக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார். ஆனால், அவர் ஏற்கனவே மதம் மாறிவிட்டதால் அந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது என்ற ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இப்போது உறுதி செய்துள்ளது.

சாதி அமைப்பு மற்றும் சாதிப் பாகுபாடுகளை அங்கீகரிக்காத ஒரு மதத்திற்கு ஒருவர் மாறும்போது, அவரது முந்தைய பட்டியல் சாதி அடையாளம் தானாகவே முடிவுக்கு வருகிறது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, ஒருவரிடம் பட்டியல் சாதிச் சான்றிதழ் இருந்தாலும், அவர் கிறிஸ்தவம் போன்ற மாற்று மதத்தைப் பின்பற்றினால் அந்தச் சான்றிதழைப் பயன்படுத்திச் சலுகைகளோ அல்லது சிறப்புச் சட்டப் பாதுகாப்போ பெற முடியாது என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.