தமிழகத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசார பாணி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்யாமல், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விஜய் பிரசாரம் செய்வதும், சில இடங்களுக்குக் காவல்துறையினர் அனுமதி அளித்தும் பிரசாரத்தை ரத்து செய்வதும் தவெக வேட்பாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேறு வழியின்றி, விஜய்யின் உருவப் பொம்மையை வைத்து வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், பழனியில் சிபிஐ(எம்) வேட்பாளரை ஆதரித்துப் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய்யை மறைமுகமாகச் சாடியுள்ளார். “திரைப்படத்தில் நீங்கள் மருத்துவராகவோ, முதலமைச்சராகவோ ஆகிவிடலாம்; ஆனால் அரசியலில் எப்படி உடனடியாக முதலமைச்சர் ஆக முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், மொழிப்போர் அல்லது தமிழ்நாட்டின் சுயமரியாதைக்காக எப்போதாவது நீங்கள் துணை நின்றதுண்டா? என வினவிய அவர், அரசியலில் அனுபவம் இல்லாமல் மேலிடத்தைப் பிடிப்பது சாத்தியமில்லை எனத் தனது பேச்சில் வெளுத்து வாங்கினார்.
