மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூரில், பெண் காவலர் ஒருவரே தனது காதலனுடன் சேர்ந்து சொந்தத் தந்தையை விஷம் கொடுத்துக் கொன்ற அதிர்ச்சித் தகவல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உயிரிழந்த ஜெயந்த் பல்லாவர் ஒரு காவல்துறை அதிகாரி ஆவார். அவரது மகள் ஆர்யாவுக்கும், ஆசிஷ் என்பவருக்கும் இடையே இருந்த காதலை அவர் எதிர்த்ததால், ஆசிஷ் ஏற்பாடு செய்த விஷத்தை ஆர்யா தனது தந்தைக்கு மில்க் ஷேக்கில் கலந்து கொடுத்துள்ளார்.

தந்தை இறந்த பிறகு, கருணை அடிப்படையில் அதே காவல்துறை வேலையில் ஆர்யா சேர்ந்துள்ளார். இருவரும் பயிற்சியை முடித்து சமீபத்தில் பணியில் சேர்ந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் ஆசிஷ் உண்மையை போலீசில் ஒப்புக்கொண்டார்.

இந்தக் கொடூரச் செயலுக்கு உதவியதாக ஆசிஷ், ஆர்யா மற்றும் அவர்களுக்கு விஷம் வாங்கிக் கொடுத்த நண்பர் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 2023-ஆம் ஆண்டு நடந்த இந்த மரணம் அப்போது இயற்கையானது என்று கருதப்பட்டது.

ஆனால், தற்போது காதலனே உண்மையை உடைத்ததால் பிஎன்எஸ் சட்டப்பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையில் பணியாற்றும் ஒரு பெண்ணே தனது தந்தையைக் கொல்லத் திட்டமிட்டு, அதே துறையில் வேலையில் சேர்ந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.