மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது இணையதளச் சேவைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு இணையத் தரவுப் பரிமாற்றம்  ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கடலடி கேபிள்கள் மூலமே நடைபெறுகிறது.

போர் காரணமாக இந்தக் கேபிள்கள் சேதமடைந்தால், இந்தியாவில் இணைய வேகம் குறைவதுடன், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் இ-காமர்ஸ் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.

இதனைத் தடுப்பதற்காக, மத்திய தொலைத்தொடர்புத் துறை  ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து அவசரகாலத் திட்டங்களை வகுத்து வருகிறது.

சிங்கப்பூர் போன்ற மாற்று வழிகள் மூலம் இணையப் போக்குவரத்தைத் திசைதிருப்பத் திட்டமிட்டாலும், அது அதிக செலவு மற்றும் தாமதத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், போர் பதற்றம் காரணமாகக் கடலுக்கடியில் சேதமடைந்த கேபிள்களைச் சீரமைக்கும் பணிகளும் முடங்கியுள்ளன.

இது இந்தியாவின் 270 பில்லியன் டாலர் மதிப்பிலான தரவு மையத் திட்டங்களுக்கும் , கூகுள் போன்ற நிறுவனங்களின் புதிய கேபிள் விரிவாக்கப் பணிகளுக்கும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. இந்த நெருக்கடியைத் தவிர்க்க, கேபிள்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.