தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடு மக்களிடையே பெருமளவு அதிகரித்துள்ளது. மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் இருந்தாலே எளிதாகக் கணக்கு தொடங்க முடியும் என்பதால், போலி கணக்குகளை உருவாக்கி மோசடி செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதனைத் தடுக்கும் வகையில், சமூக வலைதளக் கணக்குகளைத் தொடங்க இனி ‘கேஒய்சி’ முறையை மத்திய அரசு கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், வங்கி கணக்கு தொடங்குவது அல்லது புதிய சிம் கார்டு வாங்குவது போலவே, பயனர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பித்த பின்னரே சமூக வலைதளக் கணக்குகளைத் தொடங்க முடியும்.
தற்போது இந்தத் திட்டம் குறித்த ஆலோசனைகள் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், இது பயனர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாக அமையும் என்று பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
