திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவுள்ள ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டிற்கான பணிகளை ஆய்வு செய்ய கோவை வந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் வைக்கும் பொய்யான விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஊடகங்களுக்கும் மக்களுக்கும் உண்மை நிலவரம் நன்றாகத் தெரியும் என்றும், அடுத்த முறையும் தமிழகத்தில் திமுக தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியே அமையும் என்பதில் தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் உறுதியாகக் கூறினார்.
மேலும், வரவிருக்கும் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் வாக்குறுதிகளின் தொகுப்பாக மட்டும் இல்லாமல், மக்களின் உண்மையான எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமையும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்காகத் தொழில் முனைவோர், விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், இது முற்றிலும் ‘மக்களுக்கான தேர்தல் அறிக்கையாக’ இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து கோவையின் தொழில் வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை வடிவமைக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. தனது பேட்டியின் போது எடுத்துரைத்தார்.
