தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஒளிபரப்பில் பாலிமர், நியூஸ் தமிழ் 24×7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்திச் சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் குறித்த செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருவதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆட்சியை விமர்சிப்பவர்களைக் கைது செய்வது, செய்தி வெளியிடுபவர்களை இருட்டடிப்பு செய்வது என இந்த அரசு ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகங்களைக் கட்டுப்படுத்த நினைப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஊடகங்களைத் தனது கட்டுப்பாட்டில் உள்ள இசைக்குழுவாக மாற்ற இந்த அரசு முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அரசு கேபிள் நிர்வாகம் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது ஜனநாயகமா அல்லது பொம்மை போல யாரோ ஒருவரால் ஆட்டுவிக்கப்படும் ஆட்சியா என்று முதலமைச்சருக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, தடையின்றிச் செய்திகள் ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.