தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதியோ அல்லது அதற்கு அடுத்த சில தினங்களிலோ வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகத்திற்கான டோக்கன்களை ஜனவரி 3-ம் தேதி முதல் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த டோக்கன் விநியோகத்திற்காக ஜனவரி 2-ம் தேதிக்குள் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் வைத்திருக்க கூட்டுறவு சங்கப் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு நாளைக்கு சுமார் 200 கார்டு உரிமையாளர்களுக்கு (முற்பகலில் 100, பிற்பகலில் 100) பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக டோக்கன்கள் விநியோகிக்கப்படும். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இம்முறை பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்கப்படலாம் என்று கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
