செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவு மருத்துவராகப் பணியாற்றி வந்த கார்த்திக் (37), குடும்பப் பிரச்சனை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், செங்கல்பட்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அவரது மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
சமீபத்தில் தனது மகளைப் பார்ப்பதற்காக கார்த்திக் ஊருக்குச் சென்றிருந்த நிலையில், குழந்தையைப் பார்க்க அவரது மனைவி அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மனவேதனையடைந்த அவர், செங்கல்பட்டு திரும்பிய பின் தனது படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த செங்கல்பட்டு நகரப் போலீஸார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு மருத்துவர் தனது குடும்பச் சிக்கலால் இத்தகைய விபரீத முடிவை எடுத்திருப்பது சக மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
