இந்தியக் குடியரசுத் தலைவரை அவமதிப்பது நாட்டின் 140 கோடி மக்களையும் அவமதிப்பதற்குச் சமம் என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சந்தால் பழங்குடியின மாநாட்டில் பங்கேற்க வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் யாரும் நேரில் வந்து வரவேற்கவில்லை என்றும், நிகழ்ச்சிக்கான இடத்தை கடைசி நேரத்தில் சிறிய இடத்திற்கு மாற்றியதன் மூலம் அவருக்குரிய மரியாதையை அரசு வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் நாட்டின் முதல் குடிமகளாகவும், பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் குடியரசுத் தலைவராகவும் இருக்கும் ஒருவரை இத்தகைய அலட்சியத்துடன் நடத்துவது திட்டமிட்ட அவமதிப்பு செயல் என அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டின் தலைவராக விளங்கும் குடியரசுத் தலைவரின் வருகை என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
இதனால் ஒரு மாநில அரசு அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரிவரச் செய்யாமலும், உரிய மரபுசார் மரியாதையை அளிக்காமலும் இருப்பது 140 கோடி இந்தியர்களையும் இழிவுபடுத்துவதற்கு ஒப்பாகும் என வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் அரசியல் சார்பற்ற உயர் பதவியில் இருப்பவரை இழிவுபடுத்தியதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குடியரசுத் தலைவர் மற்றும் பழங்குடியின மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
