தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று, முதலமைச்சர் விஜய் அவையில் பதிலுரை வழங்கிப் பேசினார். அப்போது, பிரதான எதிர்க்கட்சியான திமுகவை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த அவர், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதலமைச்சரின் இந்த அதிரடி குற்றச்சாட்டுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அவையிலிருந்து உடனடியாக வெளிநடப்பு செய்தனர். திமுகவினர் வெளியேறியதைத் தொடர்ந்து சட்டசபையில் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், “எனக்கு ஒரு குட்டிக்கதை சொல்லத் தோன்றுகிறது, சொல்லலாமா?” என சபாநாயகரிடம் அனுமதி கோரினார். சபாநாயகர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் தனது பாணியில் குட்டிக்கதையைத் தொடங்கினார்.

அவர் தனது கதையில், “ஒரு ஊரில் பெரியவர் ஒருவர் வெயில் அதிகமாக இருக்கிறது என்று கண்கள் மீது கையை வைத்து மறைத்தபடி சுற்றும் முற்றும் தேடிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த ஒரு சிறுவன், என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு அந்தப் பெரியவர், ஒன்றுமில்லை தம்பி, உங்கள் அப்பா இங்கேதான் இருப்பார் என்று சொன்னார்கள், அதான் தேடிக்கொண்டிருக்கிறேன். எங்கே உங்கள் அப்பாவைக் காணோம்? அவரைத்தான் தேடுகிறேன் என்று கூறினார்” என முதலமைச்சர் விஜய் தனது குட்டிக்கதையை முடித்தார்.

முதலமைச்சரின் இந்த நக்கல் நிறைந்த கதையைக் கேட்டு அவையிலிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பலத்த சிரிப்பொலி எழுப்பினர். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “எங்களுக்கும் நக்கல், நையாண்டியாக, சம்பந்தம் சம்பந்தமே இல்லாமல் குட்டிக்கதை சொல்லத் தெரியும். அந்தக் கதையில் பெரியவர் அப்படித்தான் சொன்னார், யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், இதற்காக யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்” என்று சவாலுடன் பேசி முடித்தார்.