மதுரையில் திமுக எம்எல்ஏ கோ.தளபதி மற்றும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இடையே வெடித்துள்ள வார்த்தைப் போர், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “காங்கிரஸ் கட்சிக்கு வார்டுகளில் பூத் கமிட்டி அமைக்கக்கூட ஆள் இல்லை, அவர்களுக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது” என எம்எல்ஏ தளபதி பகிரங்கமாக விமர்சித்துள்ளார். தவெக தலைவர் விஜய் கிளப்பிய ‘ஆட்சியில் பங்கு’ என்ற விவகாரம் ஏற்கனவே கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில், திமுக எம்எல்ஏவின் இந்த அதிரடி பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் அமைந்துள்ளது.

​இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், அதிகாரத் திமிருடன் பேசுபவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டதாகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரே போட்டியிட வேண்டும் என்று தனது கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். தன்மானம் காக்கத் தோழமைக் கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என்ற அவரது பதிவு, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.