தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ எடுத்து வரும் அதிரடி நகர்வுகள், மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களிடையே பெரும் விவாதத்தையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் தங்களுக்கு ஆதரவு இருப்பதாக தவெக தரப்பில் கூறப்பட்ட கருத்தை முன்வைத்து, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் விஜய்யை மிகக் கடுமையாகச் சாடியுள்ளனர். குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, விஜய் நடைமுறை எதார்த்தம் புரியாமல் “வாயில் வடை சுடுகிறார்” என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

​இதேபோல், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்க்குத் தனது சொந்தக் கட்சியில் இருக்கும் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை கூடத் தெரியவில்லை எனச் சுட்டிக்காட்டி, அக்கட்சியின் உட்கட்சி கட்டமைப்பைக் கேலி செய்துள்ளார். மற்றொருபுறம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசும் விஜய்யை நோக்கி, “உங்கள் படத்திற்கே பிளாக் டிக்கெட் விற்கப்படுவதைத் தடுக்க முடியாத நீங்கள், எப்படி நாட்டில் ஊழலை ஒழிப்பீர்கள்?” என்று காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், தவெகவை நோக்கி வீசப்படும் இந்த விமர்சனக் கணைகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.