திமுக கூட்டணி பலமாக இருப்பதாகத் தோன்றினாலும், அதன் அஸ்திவாரம் பலவீனமாக உள்ளது; உண்மையான உலகநாயகன் பிரதமர் மோடிதான்” என்று முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜு தெரிவித்தார். இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களது கூட்டணியை மிகவும் பலம் வாய்ந்த கூட்டணி என்று கூறி வருகிறார். ஆனால், அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியோ, தங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்கத் தொடங்கிவிட்டது. இதுவே அந்தக் கூட்டணியின் பலவீனத்தைக் காட்டுகிறது.
நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த போது, ஊழல் அரசியலையும், வாரிசு அரசியலையும் ஒழிப்பேன் என்று கூறி டார்ச் லைட்டை வீசி டிவியை உடைத்தார். ஆனால், இப்போது அவர் திமுக-வுடன் கைகோர்த்துள்ளார். ‘உலகநாயகன்’ என்று போற்றப்பட்டவர், இப்போது அரசியலில் ஒரு ‘நகைச்சுவை நாயகனாக’ மாறிவிட்டார்.
திமுக கூட்டணி என்பது ‘பில்டிங் ஸ்ட்ராங், அஸ்திவாரம் வீக்’ என்ற கதையாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, உண்மையான உலகநாயகன் பிரதமர் நரேந்திர மோடிதான். தமிழ் மொழியை உலக அரங்குக்குக் கொண்டு சென்ற பெருமை அவரைச் சேரும். இதற்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகப் பிரதமர் மோடி கூறுகிறார். இது குறித்து திமுக-வினரால் நேர்மையாகப் பேச முடியுமா? இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார்.
