“வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்; சாதிய, மதவாத சக்திகளுடன் ஒருபோதும் விசிக கூட்டணி வைக்காது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சாதிய மற்றும் மதவாத அரசியல் கட்சிகளோடு ஒருபோதும் கூட்டணி வைப்பதில்லை என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக உள்ளது. அத்தகைய கட்சிகள் இடம்பெறும் கூட்டணியிலும் நாங்கள் அங்கமாக இருக்க மாட்டோம். அந்த நிலைப்பாட்டில் தற்போதும் உறுதியாக இருக்கிறோம். திமுக கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகளைச் சேர்க்க வேண்டும் என்பதை அக்கட்சியின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.

“இந்தக் கட்சியைச் சேர்க்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும்” என்று திமுக-விடம் சொல்ல எங்களுக்கு எந்த அதிகாரமும், உரிமையும் இல்லை. திமுக யாரை கூட்டணியில் இணைத்தாலும் அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். திமுக-வுக்கு ஆலோசனை வழங்கவோ அல்லது நெருக்கடி கொடுக்கவோ நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு எந்தக் கட்சி மீதும் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது.

மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடும் வலிமை எந்தக் கட்சிக்கும் இல்லை. திமுக கூட்டணி மிகவும் கட்டுக்கோப்பாகவும், வலிமையுடனும் உள்ளது. வரும் தேர்தலை மிகுந்த நம்பிக்கையுடன் சந்தித்து மீண்டும் மகத்தான வெற்றி பெறுவோம். நடிகர் விஜய் புதிதாக கட்சித் தொடங்கியிருப்பது மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல; ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அவர் கட்சித் தொடங்கியுள்ளார். இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும் முன்னதாக திமுக கூட்டணியில் பாமக ராமதாஸ் இணைவதாக ஒரு தகவல் பரவிய நிலையில் இது தொடர்பாக திருமாவளவனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு அவர்களுடன் கூட்டணி கிடையாது என தாங்கள் முடிவு செய்துவிட்டதாக கூறினார். இதன் காரணமாக ராமதாஸ் கூட்டணியில் சேர விசிக எதிர்ப்பு தெரிவிக்கும் என்று தகவல் பரவிய நிலையில் தற்போது பிற கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் அதிகாரம் தங்களுக்கு கிடையாது எனவும் நாங்கள் யாரை இணைத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் எனவும் திருமாவளவன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.