கோவை மாநகரத்தில் உள்ள பிரபல உணவகங்களை குறி வைத்து, உணவில் பூச்சி அல்லது பல்லி இருந்தது என கூறி பணம் பறிக்க முயலும் மோசடிக்காரர்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் நடந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. பல்லி இருந்ததாக பொய் புகார் அளித்து, உணவக உரிமையாளரிடம் பணம் வாங்க முயன்றவர்களில் 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் 5 பேர் குழுவாக வந்து சாப்பிட்டனர். அவர்கள் பிரியாணி வாங்கியபோது, குழம்பு ஊற்றிய ஊழியரிடம் “பல்லி உள்ளது” என்று புகார் கூறினர். இதனால் ஓட்டலில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பிரியாணி கடை உரிமையாளர், இந்த புகார் திட்டமிட்டு செய்யப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, மாநகர காவல் ஆணையர் சரவணகுமாரிடம் முறையிட்டார்.
இதையடுத்து, ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், உணவகத்தில் உண்மையில் பல்லி கிடைக்கவில்லை என்றும், வந்த நபர்களே பல்லியை கொண்டு வந்து உணவில் போட்டதும், பின்னர் வீடியோ எடுத்ததும் தெரியவந்தது.
சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரில் 2 பேர் அண்ணாதுரை (29) மற்றும் சரவணன் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் ஈரோடு குமாரபாளையம் சேர்ந்தவர்; மற்றொருவர் கோவை ரத்தினபுரம் சேர்ந்தவர்.
மேலும், இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபரான நடராஜன் முன்ஜாமீன் பெற்ற நிலையில், மீதமுள்ள 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உணவக உரிமையாளர்கள் மற்றும் உணவக சங்கங்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளன.
சமீபகாலமாக, இன்ஸ்டாகிராமில் பேமஸ் ஆக, அல்லது பணம் பறிக்க, சிலர் இப்படியான மோசடிகளை மேற்கொள்வது அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது போன்றவர்களிடம் உணவக உரிமையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
