காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில், 2012-ம் ஆண்டு நடந்த ஆதாய கொலை வழக்கில், நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஈகாடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரின் மனைவி ராஜம் (வயது 69) என்பவர், திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (43) மற்றும் அவரது மனைவி சரிதா (40) ஆகியோரால் 11.6.2012 அன்று கொலை செய்யப்பட்டதாக புகாரும் வழக்கும் எழுந்தது.

இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருநாகலிங்கம் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். தொடர்ந்து வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மாவட்ட எஸ்.பி. சண்முகத்தின் உத்தரவின் பேரில், தற்போதைய இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், நீதிமன்ற ஏட்டு பாஸ்கரன் மற்றும் அரசு வழக்கறிஞர் சசிரேகா ஆகியோர் விசாரணையில் தனிக்கவனம் செலுத்தினர்.

இந்நிலையில், நேற்று  மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல், வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என உறுதி செய்து, சரிதாவிற்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதமும், பாஸ்கருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை தண்டனை பெற்றுத்தர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய போலீசார் மற்றும் நீதிமன்ற காவலர் ஆகியோர் மீது மாவட்ட எஸ்.பி. சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார். இவ்வழக்கு தீர்ப்பு, பொதுமக்களிடம் நீதியின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.