ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஃபேன்சி ஸ்டோர் ஒன்றில் வேலை பார்த்து வந்த அஞ்சு என்ற திருமணமான பெண்ணுக்கும், நாகேந்திரன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அஞ்சு திடீரென நாகேந்திரனிடம் பேசுவதை நிறுத்தியதால் அவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. தன்னுடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததால் கடும் ஆத்திரமடைந்த நாகேந்திரன், அப்பெண்ணைப் பழிவாங்க முடிவு செய்துள்ளார்.

​இதையடுத்து, அஞ்சு வேலை பார்த்துக்கொண்டிருந்த ஃபேன்சி ஸ்டோருக்குள் பட்டப்பகலில் திடீரெனப் புகுந்த நாகேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். அலறியடித்தபடி ரத்த வெள்ளத்தில் சரிந்த அப்பெண்ணைப் பார்த்ததும், நாகேந்திரனும் தான் கொண்டு வந்திருந்த விஷத்தைக் குடித்து அங்கேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த எதிர்பாராத கொடூரச் சம்பவத்தால் அக்கம் பக்கத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

​உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காகச் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

​இதனிடையே, அந்த ஃபேன்சி ஸ்டோருக்குள் நாகேந்திரன் புகுந்து பெண்ணைக் கொடூரமாகக் கத்தியால் குத்தும் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.