பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் யாதவ் என்ற இளைஞர், மத்திய பொதுப்பணி ஆணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் 440-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளதாகப் பொய் கூறி ஒட்டுமொத்த ஊரையும் ஏமாற்றியுள்ளார். இவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் அவரைப் பெரும் புகழுடன் கொண்டாடினர்.
மேலும் தொலைக்காட்சிகளில் பேட்டிகள் கொடுத்தது மட்டுமன்றி, சட்டமன்ற உறுப்பினரின் நிதி உதவியையும் அவர் பெற்றுள்ளார். ஒரு சாதனையாளராகப் பார்க்கப்பட்ட ரஞ்சித் யாதவின் இந்த வெற்றிச் செய்தி போலியானது என்று தெரியவந்தபோது, அந்தப் பகுதியே பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. தன்னுடைய பொய் பித்தலாட்டங்கள் மூலம் சமூகத்தை ஏமாற்றி வந்த ரஞ்சித் யாதவ், இறுதியில் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.
இதில் மிகவும் சுவாரசியமான மற்றும் முரண்பாடான விஷயம் என்னவென்றால், சில நாட்களுக்கு முன்பு ரஞ்சித் யாதவின் வெற்றியை நேரில் பாராட்டி மலர்க்கொத்து கொடுத்து கௌரவித்த அதே காவல் ஆய்வாளர், தற்போது அவரை மோசடி வழக்கில் கைது செய்துள்ளார். பாராட்டிய கைகளாலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
