வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதை ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி ஹர்தோய் தேவி நிரூபித்துள்ளார். நதுசரி சோப்தா பிளாக்கில் உள்ள அலி முகமது கிராமத்தைச் சேர்ந்த இவர், மத்திய அரசின் ‘உல்லாஸ் நவ பாரத்’ (Ullas Nav Bharat) திட்டத்தின் கீழ் நடைபெற்ற வாசிப்பு மற்றும் எழுத்துத் தேர்வில் ஆர்வத்துடன் பங்கேற்றார். தள்ளாத வயதிலும் கல்வி கற்க வேண்டும் என்ற இவரது வைராக்கியம், அந்தப் பகுதியிலுள்ள மற்ற முதியவர்களுக்கும் ஒரு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.
இவரது இந்த அதிரடி முடிவால் ஈர்க்கப்பட்ட அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பல முதியவர்கள், தற்போது தங்களின் முதல் கல்விப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். “படிக்க வயதே தடையல்ல” என்று வாழ்ந்து காட்டிய ஹர்தோய் தேவியின் செயல், சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஒரு பாட்டியின் கல்வி ஆர்வம், ஒட்டுமொத்த மாவட்டத்தையே படிக்கத் தூண்டியது ஹரியானாவில் ஒரு புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
