மும்பை முலுண்ட் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 42 வயதான எலக்ட்ரீஷியன் ராஜு குப்தா, தனது மனைவி புஷ்பாவிடம் விவாகரத்து கேட்டு தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கல்யாண் நோக்கி வந்த லோக்கல் ரயில் முன் தனது மனைவியை ஆக்ரோஷமாகத் தள்ளிவிட்டுள்ளார். இந்த கொடூரக் காட்சியை அவர்களின் 13 வயது சிறுவன் நேரில் கண்டு அலறித் துடித்தது பார்ப்பவர் நெஞ்சை பதற வைத்துள்ளது. பலமுறை போலீசில் புகார் அளித்தும், சமாதானம் பேச ராணுவ வீரரான தம்பி வந்தும், இறுதியில் இந்தப் போராட்டம் மரணத்தில் முடிந்துள்ளது.

​இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக, மனைவியின் தம்பியான ராணுவ வீரர் கமலேஷை தந்திரமாக வீட்டுக்குள் பூட்டிவிட்டு ராஜு தப்பியுள்ளார். பின்னர் ரயில் நிலையத்திற்கு வந்து மனைவியைக் கொல்லும் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். அங்கிருந்து தனது இளைய மகனுடன் தப்பி ஓடிய ராஜு குப்தாவை, ரயில்வே போலீசார் (GRP) தீவிரமாகப் பின்தொடர்ந்து சூரட்டில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். குடும்பத் தகராறு ஒரு பெண்ணின் உயிரைப் பறித்ததோடு, ஒரு சிறுவனின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.