அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ரகசியத் தூதர்களாகச் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 15 அம்ச அமைதித் திட்டத்தை இந்த இரு நாடுகளும் ஈரானிடம் கொண்டு சேர்த்துள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தையைத் தங்கள் நாடுகளில் நடத்துவதற்கும் அவை விருப்பம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவுடன் எந்த நேரடிப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று ஈரான் பகிரங்கமாக மறுத்தாலும், திரைமறைவில் இந்த ராஜதந்திர நகர்வுகள் குறித்து அந்நாடு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சிகளுக்கு ஈரான் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. சமீபத்தில் உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கராச்சி நோக்கிச் சென்ற ‘செலான்’  என்ற கப்பலை, ஈரானிய கடற்படை ஹோர்முஸ் ஜலசந்தியிலிருந்து திருப்பி அனுப்பியது.

ஈரானிய கடற்படையின் அனுமதியின்றி இந்த வழியாகச் செல்ல முடியாது என்று கூறி அந்தக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது. இதன் மூலம் ஹோர்முஸ் ஜலசந்தி மீதான தனது அதிகாரத்தை ஈரான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்திருந்தாலும், மறுபுறம் ஈரான் தனது பிடிவாதமான ராணுவ நிலைப்பாட்டைத் தொடர்ந்து காட்டி வருகிறது.