மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் முக்கியப் பகுதியான கார்க் தீவை (Kharg Island) ஆக்கிரமிக்க அமெரிக்காவுடன் இணைந்து ஒரு அரபு நாடு சதி செய்வதாக ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகிர் காலிபாஃப், “எங்கள் தீவைக் கைப்பற்றத் துடிக்கும் எதிரிகளுக்குப் பிராந்தியத்தில் உள்ள ஒரு நாடு அடைக்கலம் கொடுத்தால், அந்த நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகள் அனைத்தும் ஈரானின் இடைவிடாத தாக்குதலுக்கு இலக்காகும்” எனப் பயங்கர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் உளவுத்துறைக்குக் கிடைத்துள்ள இந்தத் தகவலால், வளைகுடா பிராந்தியமே தற்போது ஒரு மிகப்பெரிய பிராந்தியப் போரை நோக்கி நகர்ந்து வருவதாக அஞ்சப்படுகிறது.
ஈரானின் இந்த அறிக்கையில் எந்த நாட்டின் பெயரும் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அமெரிக்காவிற்கு நெருக்கமான ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) நோக்கியே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே சவூதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட ஆறு அரபு நாடுகள் ஈரானின் தாக்குதல்களுக்கு எதிராகக் கூட்டறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், ஈரானின் இந்த ‘அழிப்பு’ மிரட்டல் அரபு நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்காப்புக்காக எத்தகைய கடுமையான நடவடிக்கையையும் எடுக்கத் தங்களுக்கு உரிமை உண்டு என அரபு நாடுகள் கூறி வரும் சூழலில், கார்க் தீவு விவகாரத்தில் அமெரிக்கா எடுக்கும் அடுத்தகட்ட நகர்வு ஒட்டுமொத்த மத்திய கிழக்கின் அமைதியையும் தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளது.
