ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்து அந்த நாடு மீள்வதற்குள்ளாகவே, அந்நாட்டின் இரண்டாவது சக்திவாய்ந்த தலைவராகக் கருதப்படும் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

காமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானின் ராணுவத்தை ஒருங்கிணைத்து வந்த லாரிஜானியின் ரகசிய இருப்பிடத்தைக் கண்டறிந்த இஸ்ரேல் ராணுவம், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்காவின் ஹிட் லிஸ்டிலும் இடம் பெற்றிருந்த இவரை, ‘டார்கெட் கில்லிங்’ முறையில் இஸ்ரேல் வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், ஈரான் தரப்பு இந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், லாரிஜானி பாதுகாப்பாக இருப்பதாகவும், விரைவில் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்றும் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், பாசிஜ் அமைப்பின் தலைவர் குலாம் ரசா சுலைமானி கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. கடந்த 18 நாட்களில் மட்டும் ஈரானின் முக்கிய 40 தளபதிகள் கொல்லப்பட்டிருப்பது, ஈரான் அணுசக்தி கனவின் மீது விழுந்த பேரிடியாகப் பார்க்கப்படுகிறது.