ஈரானுடன் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (National Counter Terrorism Center) இயக்குநர் ஜோ கென்ட் செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவி விலகியதுடன் நில்லாமல், ட்ரம்ப் அரசு மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்துள்ளார். அமெரிக்காவிற்கு ஈரானால் நேரடியான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும், இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் அழுத்தத்தின் காரணமாகவே இந்தப் போர் தொடங்கப்பட்டது என்றும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
After much reflection, I have decided to resign from my position as Director of the National Counterterrorism Center, effective today.
I cannot in good conscience support the ongoing war in Iran. Iran posed no imminent threat to our nation, and it is clear that we started this… pic.twitter.com/prtu86DpEr
— Joe Kent (@joekent16jan19) March 17, 2026
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில், ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. தற்போது ஈரானின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றுள்ள மோஜ்தபா காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். மறுபுறம் அதிபர் ட்ரம்ப் தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தற்போது மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
