ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று நடந்த 134-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை கிரிஜா என்பவரைப் பாராட்டிப் பேசினார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தான் சந்தித்த கிரிஜாவைச் சமீபத்தில் நாகர்கோவிலில் மீண்டும் சந்தித்ததாகக் குறிப்பிட்ட பிரதமர், அவர் தற்போது 15 பள்ளிகளை நடத்தி வருவதாகவும், அவரின் தேசபக்தி உணர்வு ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்றும் புகழாரம் சூட்டினார்.

நாட்டின் வீரர்களின் நலனுக்காகப் பங்களிக்க விரும்பிய ஆசிரியை கிரிஜா, தனது பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரையும் தினமும் 1 ரூபாய் வீதம் சேமிக்க ஊக்கப்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஓராண்டில் ஒரு மாணவர் 365 ரூபாய் வரை சேமிக்க, ஒட்டுமொத்தமாகச் சுமார் 40 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது.

இந்த முழுத் தொகைக்கான காசோலையை கிரிஜா தன்னிடம் ஒப்படைத்ததாகக் கூறிய பிரதமர் மோடி, அவருடன் பேசியபோதுதான் அவருக்குள் இருக்கும் ஆழமான தேசபக்தியைத் தான் உணர்ந்து கொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.