கோடை மற்றும் மழைக்காலங்களில் கொசுக்களின் தொல்லை அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு விசித்திரமான வீடியோ ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகக் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க மக்கள் கொசுவர்த்தி சுருள், திரவங்கள் அல்லது பாதுகாப்பான கொசுவலைகளைப் பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், நபர் ஒருவர் கொசுவலைக்குள்ளே மிகவும் நிம்மதியாக ஆழமான தூக்கத்தில் இருப்பது போல முதலில் தோன்றுகிறது.

ஆனால், கேமரா அவரது கால்களை நோக்கித் திரும்பும்போது பார்ப்போரைக் பதறவைக்கும் ஒரு காட்சி அரங்கேறுகிறது. அந்த நபரின் கால்கள் கொசுவலையின் ஓரத்தில் ஒட்டியபடி இருந்ததால், வலையின் வெளிப்புறத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கொசுக்கள் அவரது கால்களை முழுமையாகச் சூழ்ந்து மொய்த்துக் கொண்டிருக்கின்றன.

அந்தக் கொசுக்கள் அவரது உடலுக்குள் துளைத்து ரத்தத்தை உறிஞ்சுகின்றனவா என்பது வீடியோவில் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பார்ப்பதற்கே அச்சுறுத்தும் வகையில் உள்ள அந்த 20 விநாடி வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ‘@Bio_comunidad’ என்ற பக்கத்தில் “கொசுக்களுக்குப் பிரம்மாண்ட விருந்து நடக்கிறது” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோவை, இதுவரை 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிர்ச்சியான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “இவ்வளவு கொசுக்கள் கடித்தும் இவரால் எப்படி இவ்வளவு நிம்மதியாகத் தூங்க முடிகிறது? இதைப் பார்க்கும் போதே நமக்கே உடம்பெல்லாம் அரிக்கத் தொடங்குகிறது” என்றும், “டெங்கு, சிக்கன்குனியா போன்ற ஆபத்தான நோய்களுக்கு அவரே அழைப்பு விடுத்துள்ளார்; வீடியோ எடுக்கும் நபர் ஏன் இவரை எழுப்பாமல் வேடிக்கை பார்க்கிறார்?” என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.