கேரள மாநிலம் நெடுமங்காடு அடுத்த பனவூர் பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முதன்மைக் குற்றவாளியான ஆஷ்கர் (31) என்பவரை போலீசார் சாட்சியம் சேகரிப்பதற்காகச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தபோது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் பாதுகாப்பை மீறி அவனுக்குத் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாய் அகிலாவின் கள்ளக்காதலனான ஆஷ்கர், தங்களது வாடகை வீட்டில் வைத்து அந்தக் குழந்தையைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
குழந்தை இறந்துவிட்டதை அடுத்து, அகிலா தமிழகத்திற்கு நடன நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது குழந்தைக்குத் திடீரென வாந்தி, இருமல் ஏற்பட்டு இறந்ததாக ஆஷ்கர் நாடகமாடியுள்ளார். ஆனால், குழந்தையின் உடற்கூறாய்வு அறிக்கையில், குழந்தையின் உடலில் பழைய மற்றும் புதிய காயங்கள் உட்பட மொத்தம் 51 சித்திரவதைக் காயங்கள் இருந்ததும், குழந்தையின் உள்ளங்கால்களில் ஆழமான தீக்காயங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
SHOCKING! 1.5-yr-old Arshid tortured to death in Nedumangad, Keralam (May 29).
Autopsy: 51 injuries — genital wounds, cigarette burns, internal bleeding, old fractures.
Mother Akhila & partner Ashkar arrested for abuse.
Grandparents had raised alarms & sought custody earlier. pic.twitter.com/Dhzq5ZyfpI
— Megh Updates 🚨™ (@MeghUpdates) June 1, 2026
மேலும், குழந்தை கீழே விழுந்து கை உடைந்ததாகக் கூறப்பட்ட பொய் உடைக்கப்பட்டு, குழந்தையை ஆஷ்கர் கொடூரமாக மிதித்ததால் தான் எலும்பு முறிவு ஏற்பட்டது என்பதும், சாப்பிட்ட உடனே பலமாகத் தாக்கியதால் தான் வாந்தி ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது என்பதும் மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டது.
இக்கொடூரக் கொலையைத் தொடர்ந்து, குற்றவாளிகள் இருவரும் சேர்ந்து தங்களது வாடகை வீட்டின் உட்புறத்தைக் கழுவி இரத்தக் கறைகளை அழித்ததும், வீட்டின் பின்புறம் குழந்தையின் ஆடைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை எரித்துச் சாம்பலாக்கியதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதற்கிடையே, சாட்சியம் சேகரிக்க ஆஷ்கரை போலீசார் அழைத்து வருவதற்கு முன்பாகவே, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவனது காரை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கினர். பின்னர் ஆஷ்கரை போலீசார் அழைத்து வந்தபோது, திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போலீஸ் வளையத்தை உடைத்துக்கொண்டு ஆஷ்கரைச் சரமாரியாகத் தாக்கினர்.
இதனால் போலீஸார் பெரும் சிரமத்திற்கு இடையே அவனைக் கூட்டத்தில் இருந்து மீட்டுச் சென்றனர். போலீஸாரின் கூடுதல் விசாரணையில், கைதான ஆஷ்கர் ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு தனது முதல் மனைவி அமினாவை வரதட்சணைக்காகக் கொடூரமாகத் தாக்கியதும், அந்தத் தாக்குதலால் அவர் ஓராண்டு காலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கோமா நிலையில் சிகிச்சை பெற்றதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
