பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் சிறுமி ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருகுல் பொதுப்பள்ளி பேருந்தில் இருந்து இறங்கிய இரண்டாம் வகுப்பு மாணவி அபித்ஞா மாடிவாலே, பேருந்து ஓட்டுநர் பேருந்தைச் சாலையின் தவறான திசையில் நிறுத்தியதால், சாலையைக் கடக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டாள்.
பேருந்தில் இருந்த ஆசிரியையும் அந்தச் சிறுமியைப் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க உதவாமல் இறக்கிவிட்டதால், எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் சிறுமி மீது மோதியது.
இந்தக் கொடூரமான விபத்துக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவ்வளவு அலட்சியமாகச் செயல்பட்டது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
बीडमधील घटना, रस्ता ओलांडताना शाळकरी विद्यार्थ्याला दुचाकीने उडवलं pic.twitter.com/dkO0LTIxhE
— VIRALबाबा (@viralmedia70) June 27, 2026
“>
மாணவர்களைப் பேருந்தில் ஏற்றும்போதும், இறக்கும்போதும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், இத்தகைய அலட்சியமான பள்ளிப் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
