ஒரு அமைதியான இரவு. ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. அங்கே நடந்த ஒரு மது விருந்து. அடுத்த நாள் காலை அறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணின் பிணம். இந்தச் சம்பவம் நொய்டாவில் தொடங்கி, அங்கிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பீகாரின் காட்டிஹார் வரை நீண்ட ஒரு திரில்லர் கதையைப் போல நகர்கிறது. நொய்டா போலீஸாரால் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி, பீகாரில் வேறு ஒரு வழக்கில் சிக்கியது எப்படி? அந்த அறைக்குள் உண்மையில் என்ன நடந்தது? இந்த முழுமையான தகவல்களை இங்கே பார்ப்போம்.

நொய்டாவின் பரோலா பகுதியில் உள்ள ஒரு வாடகை குடியிருப்பில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மெஹக் அகமது என்ற இளம் பெண் தனது தோழியுடன் 13-வது அறை எண் கொண்ட வீட்டில் வசித்து வந்தார். அதே கட்டிடத்தின் அதே தளத்தில், 23-வது அறை எண்ணில் பீகாரைச் சேர்ந்த ரமன் ராஜ் என்ற வாலிபர் வசித்து வந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சயமான நண்பர்கள்.

கடந்த ஆகஸ்ட் 7 மற்றும் 8-ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவு… அது ஒரு சாதாரண இரவாகத்தான் தொடங்கியது. மெஹக்கின் தோழி கூறிய தகவலின்படி, நள்ளிரவில் மெஹக்கை ரமனின் பால்கனியில் பார்த்துள்ளனர். இருவரின் கைகளிலும் மது பாட்டில்கள், தண்ணீர் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டுகள் இருந்தன. இருவரும் சிறிது நேரம் அங்கே பேசிக்கொண்டிருந்துவிட்டு, பின்னர் ரமனின் அறைக்குள் சென்றனர்.

மறுநாள் காலையில் தோழி எழும் போது மெஹக் தன் அறையில் இல்லை. போனுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த தோழி, ரமனின் அறைப் பக்கமாகச் சென்றபோது, அந்தக் கதவு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. ரமனின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

உடனே கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் காவலாளிக்குத் தகவல் சொல்லப்பட்டது. அவர்களின் முன்னிலையில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டபோது, உள்ளே இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. அங்கே தரை மீது ரத்த வெள்ளத்தில் மெஹக்கின் சடலம் கிடப்பதைப் பார்த்து அனைவரும் அதிர்ந்துபோயினர். உடனடியாக போலீசுக்குத் தகவல் பறந்தது.

மெஹக் எப்படி ரமனின் அறைக்குள் சென்றார்? ரமன் எங்கே போனார்? என்ற இரண்டு கேள்விகள் காவல்துறையின் முன் நின்றன. மெஹக்கின் தோழி மற்றும் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், ரமன் ராஜ் மீது கொலைச் சந்தேகம் வலுப்பெற்றது. கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீஸ் ரமனைத் தேடத் தொடங்கியது, ஆனால் அதற்குள் அவன் நொய்டாவை விட்டு தப்பியோடிவிட்டான்.

பீகாரில் முழுமையான மதுவிலக்கு அமலில் உள்ளது. இதற்கிடையே, காட்டிஹார் நகர் காவல் நிலைய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது,  சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த ரமன் ராஜைப் பிடித்தனர். சோதனையில் அவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

தங்களை ஒரு கொலையாளி வழக்கில் தேடுகிறார்கள் என்ற விபரம் அறியாமல், உள்ளூர் போலீசார் அவனை மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மறுபுறம், நொய்டா போலீஸ் தீவிர விசாரணைக்குப் பிறகு ரமன் காட்டிஹார் சிறையில் இருப்பதை மோப்பம் பிடித்து அங்கே விரைந்தது.

தற்போது ரமன் ஏற்கனவே மது வழக்கில் சிறையில் இருப்பதால், அவரை நேரடியாக நொய்டா அழைத்துச் செல்வதில் சட்டப்பூர்வ நடைமுறைகள் உள்ளன. இதனால் நொய்டா போலீசார்  நீதிமன்றத்தில் ரிமண்ட் மற்றும் இதர நடவடிக்கைகளுக்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து காட்டிஹார் டி.எஸ்.பி விஷால் ஆனந்த் கூறுகையில், “ரமன் மது வழக்கில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் நடந்த பெண் கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி என்பதால், நொய்டா போலீசார் அவரைத் தேடி இங்கு வந்துள்ளனர். காட்டிஹார் போலீஸ் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது” என்றார்.

அந்த நள்ளிரவு மது விருந்துக்குப் பிறகு மெஹக்கிற்கும் ரமனுக்கும் இடையே என்ன தகராறு வெடித்தது? கொலையின் பின்னணி என்ன? ரமன் எதற்காக உடனடியாகக் காட்டிஹார் தப்பியோடினான்? இந்த அத்தனை கேள்விகளுக்கும் நொய்டா போலீசாரின்  விசாரணைக்குப் பின்னரே முழுமையான விடை கிடைக்கும்.