முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் திருநெல்வேலி வந்த அவர், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிலையில், நேற்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.694 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது.
விழா மேடை ரோஜா உள்ளிட்ட பல்வேறு வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்வர் வருகைக்கு முன்பாக தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூக்களில் மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்று, தூய்மைப் பணியாளர் கண்ணன் என்பவரை கையில் கடித்தது.
இதனால் வலியால் துடித்த அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பாம்பு கடித்த பகுதியில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் பங்கேற்ற விழா மேடையில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு கண்டறியப்பட்ட சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
