“திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவது சமூக சீர்கேடுகளுக்கும், பெண்கள் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் உள்ளது” என்று பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

‘தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், புதன்கிழமை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிக்கு வந்தார். இதையடுத்து, திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு செய்த அவர், ஆர்.கே. பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்களுக்கான உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

“ஆட்சியாளர்கள் மூன்று தலைமுறையை போதைக்கு அடிமையாக்கியுள்ளனர். தற்போது இளம் தலைமுறையும் அதே பாதையில் தள்ளப்பட்டு வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களே சமூகத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள், வன்கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். குழந்தைகள்மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் கொடூரர்களுக்கு நீதித்துறை கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

மக்கள் கோராத டாஸ்மாக் கடைகளை திமுக அரசு தொடர்ந்து திறந்து வருகிறது. தமிழ்நாட்டு ஆண்கள் டாஸ்மாக் கடைகளில் செலவிடும் பணத்தை பெண்களுக்கு உரிமைத் தொகையாக வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டு, பெற்றோர்கள் அச்சத்துடன் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களும், அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு மருத்துவர்களும் இல்லை.

வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் சிந்தித்து நல்ல முடிவெடுத்து வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்; மதுபோதை இல்லாத தமிழ்நாடு உருவாகும்” என்றார்.