தனது அலுவலகத்தின் முன்பு இருந்த ஒரு தெருநாயை மீட்டு சிகிச்சை அளித்து, தற்போது அதை செல்லப் பிராணியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளமான எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 2021-ஆம் ஆண்டு அமைச்சர் பொறுப்பேற்ற சில மாதங்களில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து வெளியேறியபோது, உடைந்த காலுடன் ஒரு நாயை கண்டதாக குறிப்பிட்டுள்ளார். செயலக வளாகத்தில் இருந்த பல நாய்களில் இதுவும் ஒன்று என்றும், சமீபத்தில் நடந்த விபத்தில் அந்த நாயின் கால் உடைந்ததாக முதலில் தகவல் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நாயின் காலைச் சரிசெய்து மீண்டும் அதே இடத்திற்கே கொண்டு சேர்க்க முடிவு செய்ததாகவும், ஆனால் மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, விபத்து பல மாதங்களுக்கு முன்பே நடந்தது என்றும், உடைந்த கால் தவறான முறையில் கூடிவிட்டதாக தெரியவந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனைச் சரிசெய்ய, அந்த நாயின் காலில் உலோகத் தகடு மற்றும் திருகுகள் பொருத்தப்பட்டதாகவும், சிகிச்சை பல மாதங்கள் நீடித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மனிதர்களுக்கான எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோரின் உதவியும் பெறப்பட்டதாக அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிகிச்சை காலத்தில் அந்த நாயுடன் குடும்பத்தினருக்கு ஆழமான பாசம் ஏற்பட்டதால், அதை மீண்டும் அதன் பழைய இடத்திற்குத் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை என்றும், அதனால் அந்த நாய்க்கு ‘பீச்சஸ்’ என்று பெயரிட்டு, குடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, செயலக வளாகத்தில் இருந்த நாய்கள் அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும், அவை எங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் புதிய விதிகளின் கீழ், ‘பீச்சஸ்’ தற்போது தங்களது செல்லப் பிராணியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரும் பாராட்டும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
