சிவராஜ்குமார், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ள ‘45’ திரைப்படம் வரும் 25-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் விளம்பர நிகழ்ச்சிக்காக நடிகர் சிவராஜ்குமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். முதல் நடிகர் விஜய் வரை பல்வேறு சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், கர்நாடகாவில் ஏன் நடிகர்கள் அரசியலுக்கு வருவதில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சிவராஜ்குமார், “மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வர வேண்டிய அவசியமில்லை. நடிகராக இருந்துகொண்டே மக்களுக்கு உதவி செய்ய முடியும். அது என்னுடைய பணம். யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வேன்” என தெரிவித்தார்.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதையும் அவர் நினைவுகூரினார். அப்போது, “விஜய் அரசியலுக்கு வரும்போது அவர் பேசிய விதம் எனக்கு பிடித்திருந்தது. விஜய் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன். ஆனால் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளித்தது. அரசியலில் விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
