மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த சூழலில், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் இரும்புத் தடுப்புகளால் அடைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. பக்தர்கள் யாரும் மலை மீது செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனிடையே, மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் பள்ளிவாசலில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக, திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி திருவிழாவை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முஸ்லீம் பக்தர்கள் மட்டும் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்ற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா வந்தார். அவரை அனுமதிக்கக் கோரி போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஹெச். ராஜா,
“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது சட்டவிரோதம். இளைஞர் பூர்ணசந்திரனின் உயிரிழப்புக்கு மதுரை மாவட்ட ஆட்சியரும் காவல் ஆணையரும்தான் காரணம். தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்னும் பட்டியலிடவே இல்லை. அப்படியானால் ஏன் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “சந்தனக்கூடு விழாவிற்கு அனுமதி வழங்கப்பட்டால், இந்துக்கள் வழிபாட்டிற்குச் செல்ல ஏன் தடை விதிக்கப்படுகிறது? இது மு.க. ஸ்டாலின் ஆட்சியா, இல்லனா முகமது ஸ்டாலின் ஆட்சியா?” எனவும் விமர்சித்தார்.
தொடர்ந்து வாக்குவாதம் அதிகரித்த நிலையில், ஹெச். ராஜா மற்றும் பாஜகவை சேர்ந்த மற்றொரு நபருக்கு மட்டும் கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க போலீசார் அனுமதி வழங்கினர்.
