எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) நடவடிக்கைக்குப் பிறகு தமிழ்நாட்டில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் பெயரில் தமிழ்நாட்டளவில் 97 லட்சம் வாக்காளர்களும், சென்னையில் மட்டும் சுமார் 14 லட்சம் வாக்காளர்களும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது வாக்குகள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்குகள் நீக்கப்பட்டிருந்தால், மீண்டும் பதிவு செய்ய வேண்டும். இதற்காக திமுக முழுமையாக துணை நிற்கும் என்றார்.
டெல்லியில் உட்கார்ந்து கொண்டு திட்டமிட்டு இவ்வளவு சூழ்ச்சிகளை செய்துவிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பீகார் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம்; அடுத்த இலக்கு தமிழ்நாடு” என்று கூறியிருப்பது மிரட்டலாக உள்ளது. இந்த வகையான உருட்டல் மிரட்டல்களுக்கு அடிமை கூட்டங்கள் வேண்டுமென்றால் பயப்படலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்களும் திமுகவும் என்றைக்கும் பயப்பட மாட்டோம் என்றார்.
மேலும், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் வேண்டுமானால் பாஜக வெற்றி பெறலாம். தமிழ்நாட்டில் அவர்களின் திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் அவர் தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையால் ஏற்படும் அபாயம் குறித்து முதன்முதலில் எச்சரிக்கை விடுத்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின்தான். சிறுபான்மை மக்கள், தலித் மற்றும் இஸ்லாமியர் வாக்குகளை நீக்குவதற்காகவே இந்த நடவடிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் விளைவாக தற்போது தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 97 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
எனவே, அனைவரும் தங்களது வாக்கு வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தனிப்பட்ட முறையில் சரிபார்க்க வேண்டும். வாக்கு இல்லாதவர்கள் உடனடியாக மீண்டும் பதிவு செய்ய வேண்டும். இதற்கான பொறுப்பு நம்மிடமே உள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
