விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, திமுகவை ‘தீய சக்தி’ என தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது:

விஜய் இத்தகைய கருத்துகளை சொந்தமாக சிந்தித்து பேசுகிறார் போலத் தெரியவில்லை. அவர் எதைப் பேசினாலும், சுயமாக சிந்தித்து, தனது அரசியல் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பேசினால் அவருக்கு நன்மையாக இருக்கும். ஆனால் அவரது பேச்சுகள் திட்டமிட்டவையாகவோ அல்லது பிறரால் தூண்டப்பட்டவையாகவோ இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

விஜய் எதற்காக அரசியல் கட்சி தொடங்கினார், அவர் பேசும் கொள்கைகள் என்ன, எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதைக் கேட்க மக்கள் எதிர்பார்ப்புடன் அவரது உரைகளை கவனித்து வருகின்றனர். ஆனால் அவரது பேச்சுகள் முழுவதும் திமுக மீதான வெறுப்பை மட்டுமே பிரதிபலிப்பதாக உள்ளது. இதனை மக்கள் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பது கேள்விக்குறியே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.