ஆபரேஷன் சிந்தூரின் தாக்குதலில் இந்தியா கொடுத்த அடியை பாகிஸ்தான் இன்னும் மறக்காமல் இருக்கிறது. இதற்கிடையில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதத் தளபதி இலியாஸ் காஷ்மீரி, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீரை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் அதிர்ச்சிகரமான ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளுக்கு ராணுவ அதிகாரிகளை அனுப்பும் உத்தரவு, பாகிஸ்தான் ராணுவத் தலைவரிடமிருந்தே வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், பாகிஸ்தானில் பயங்கரவாத மறைவிடங்கள் இல்லை என உலகிற்கு முன் கூறி வந்த இஸ்லாமாபாத் அரசின் பொய்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

மேலும், காஷ்மீரி தனது வீடியோவில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதி சடங்குகளை ராணுவ நெறிமுறைகளின்படி நடத்துமாறு, GHQ நேரடியாக உத்தரவிட்டதாகவும், இறுதி ஊர்வலங்களில் படைப்பிரிவு தளபதிகள் சீருடையில் பங்கேற்று பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட வேண்டும் என முனீர் உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தும் வகையில், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பயங்கரவாதிகளின் இறுதி சடங்குகளில் பங்கேற்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில், மற்றொரு வீடியோவில் காஷ்மீரி, மசூத் அசார் குறித்தும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். டெல்லி திகார் சிறையிலிருந்து விடுதலையாகி பாகிஸ்தானுக்கு வந்த மசூத் அசார், பாலகோட்டை தன் தளமாகக் கொண்டு டெல்லி, மும்பை தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய தாக்குதலால் மசூத் அசாரின் குடும்பம் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் காஷ்மீரி ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.
