தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் நடந்த கூட்டத்தில் அதிமுகவை மறைமுகமாக விமர்சித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாவின் பெயரைத் தாங்கியிருக்கும் கட்சிகள் அவரை மறந்துவிட்டன என்றும், ஊழல் மற்றும் தீய சக்திகளை எதிர்க்கும் தைரியம் தனக்கு மட்டுமே இருப்பதாகவும் விஜய் சாடினார்.

இதுவரை அதிமுகவை நேரடியாகத் தாக்காத விஜய், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அதிரடியாகப் பேசியுள்ளார். விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு அதிமுக தரப்பு “பனையூர் பண்ணையார்” என அழைத்து மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது.

சினிமா டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்றதே ஊழல் தான் என்றும், தங்கள் படத்தை வெளியிட அன்றைய முதலமைச்சர் வீட்டு வாசலில் விஜய் ஐந்து மணி நேரம் கைகட்டி காத்திருந்த வரலாற்றை மறக்க வேண்டாம் என்றும் அதிமுக விமர்சித்துள்ளது.

மேலும், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவது என்ன நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

கரூரில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்குச் சென்று நேரில் ஆறுதல் சொல்லாமல், அவர்களைத் தனது பனையூர் வீட்டிற்கு வரவழைத்தது “பண்ணையார் தனம்” என்று அதிமுக சாடியுள்ளது.

இது ஒரு ஆபத்தான அரசியல் அடையாளம் என்றும், டைரக்டர் சொன்னதைச் செய்யும் நடிகராகவே விஜய் இன்னும் இருக்கிறார் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

விஜய்யின் பேச்சால் அதிருப்தி அடைந்த அதிமுகவினர், “பனையூர் குப்பைகளையும் கூட்டி எறிவோம்” எனத் தீவிரமாகப் பதிவிட்டு வருவதால் இரு தரப்பினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் வலுத்துள்ளது.