தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்ட இந்த கூட்டத்தில், க்யூஆர் குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டு பெற்ற நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.

முன்னதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் அறிக்கை மற்றும் பரப்புரை குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் உரையாற்றினர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், தவெக ஆட்சியில் ஒரு துளி ஊழல் கூட இருக்காது என்றும், அதற்குத் தான் ஒருபோதும் இடம் கொடுக்கப் போவதில்லை என்றும் உறுதியளித்தார்.

முந்தைய ஆட்சியாளர்களைப் போலவோ அல்லது தற்போதைய ஆட்சியாளர்களைப் போலவோ தான் ஊழல் செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், மற்றவர்களுக்கு அடங்கிப் போகவோ அல்லது அடிமையாக இருக்கவோ தான் அரசியலுக்கு வரவில்லை என்று ஆவேசமாகப் பேசினார்.