அதிமுக-விலிருந்து விலகி தவெக-வில் இணைந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் அவர்கள், தவெக தலைவர் விஜய்யின் செல்வாக்கு தமிழகத்தைத் தாண்டி உலக அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், வெளிநாடுகளில் வசிக்கும் சுமார் 31 லட்சம் தமிழர்கள் விஜய்க்கு வாக்களிப்பதற்காகவே தமிழகம் வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உலக வரலாற்றிலேயே ஒரு அரசியல் தலைவருக்காக இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வெளிநாட்டு வாழ் மக்கள் திரண்டு வருவது இதுவே முதல்முறை என்றும், இது விஜய்க்கு மட்டுமே கிடைத்த தனிச்சிறப்பு என்றும் அவர் பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

​ஏற்கனவே தவெக-வின் உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக உலக அளவில் கோடிக்கணக்கில் நடைபெற்று வரும் நிலையில், செங்கோட்டையன் அவர்களின் இந்த அறிவிப்பு தவெக தொண்டர்களுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. “எங்கள் தலைவருக்கு வெளிநாடுகளில் இருக்கும் செல்வாக்கு இதுதான்!” எனத் தவெக-வினர் சமூக வலைதளங்களில் இந்தப் பதிவைக் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம், இது தேர்தல் களத்தில் மற்ற கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.